ஏரிப்பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்


ஏரிப்பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்
x

பூதலூர் ஒன்றியத்தில் ஏரிப்பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் ஒன்றியத்தில் ஏரிப்பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு போக சாகுபடி

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றிய பகுதியில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், ஆகிய 3 ஆறுகள் பாய்ந்து வருகின்றன. இருப்பினும் பூதலூர் ஒன்றியத்தில் வானம் பார்த்த பூமியாக செங்கிப்பட்டி உள்ளது. செங்கிப்பட்டி பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒருபோக நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இந்த பணிகளுக்கு உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலமும், புதிய கட்டளை மேட்டு கால்வாய் மூலமும் தண்ணீர் பெற்று அதன் மூலம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரப்பி அதிலிருந்து பாசனம் பெற்று ஒரு போக சாகுபடி நடைபெறும்.

அறிவிப்பு இல்லை

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் மே மாதம் 24-ந் தேதியே திறக்கப்பட்டது. இதைப்போல மாயனூர் மற்றும் பெட்டவாய்த்தலையில் கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்குண்டான் வாய்க்கால் தலைப்பில் தண்ணீர் ஜூலை மாதத்தில் திறக்கப்பட்டது. உரிய நேரத்தில் பூதலூர் பாசனப்பகுதிகளுக்கு உய்யக்குண்டான் நீட்டிப்பு, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் உற்சாகத்துடன் ஒருபோக சாகுபடி கடந்த ஆண்டு மேற்கொண்டனர்.தற்போது இதுவரையில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறப்பது குறித்து எந்தவித அறிவிப்பையும் நீர்வள ஆதாரத்துறை வெளியிடவில்லை. இதனால் செங்கிப்பட்டி பகுதியில் ஒருபோக நெல் சாகுபடி குறித்து ஒரு நிச்சயமற்ற நிலை நிலவி வருகிறது.

நிச்சயமற்ற சூழ்நிலை

தற்போது கோடை காலத்தை போல வெயில் தினமும் கொளுத்துகிறது. இதனால் புதிய கட்டளை கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் அதைக் கொண்டு அனைத்து ஏரிகளையும் நிரப்ப முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மேட்டூர் அணையிலும் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து சாதகமான நிலையில் இல்லாத சூழ்நிலையில் செங்கிப்பட்டி பாசன பகுதி ஒருபோக சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளிடையே ஒரு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் வறண்டு போய் காணப்படுகிறது. கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீட்டிப்பு வாய்க்கால் நீர்வரத்தை எதிர்பார்த்து தூர்வாரப்பட்டு உள்ளது.இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நீர்வள ஆதாரத்துறையும் வேளாண்துறையும் ஒருங்கிணைந்து செங்கிப்பட்டி பாசன பகுதி விவசாயிகளுக்கு நடப்பாண்டில் பயிரிடுவது குறித்து உரிய தொழில்நுட்ப முறைகளை தெரிவிக்க வேண்டும் என்று விவசாய ஆர்வலர்கள் கேரிக்கை விடுத்துள்ளனா.


Next Story