ஆனைக்குட்டம் அணையில் பழுதான ஷட்டர்களால் வீணாகும் தண்ணீர்


ஆனைக்குட்டம் அணையில் பழுதான ஷட்டர்களால் வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகருக்கு குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர் பழுதால் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை தொடரும் நிலையில் ஷட்டர்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகருக்கு குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர் பழுதால் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை தொடரும் நிலையில் ஷட்டர்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனைக்குட்டம் அணை

விருதுநகர் அருகே அர்ச்சனா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆனைக்குட்டம் அணைக்கு கடந்த 1984-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அடிக்கல் நாட்டினார். கடந்த 1989-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி இந்த அணையினை திறந்து வைத்தார். இந்த அணை பிரதானமாக விருதுநகரின் குடிநீர் தேவைக்கு உதவிகரமாக இருக்கும். அப்பகுதியில் உள்ள கிராம விவசாய பாசன வசதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த அணை திறந்து வைக்கப்பட்டதில் இருந்தே ஷட்டர் பழுதால் நீரைத்தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அரசுக்கு பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மழைக்காலங்களில் ஷட்டர்களின் அடியில் மணல் மூடைகளை அடுக்கி நீரைத் தேக்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையும் பயன் தருவதில்லை.

இதற்கிடையில் ஷட்டர் பழுது பார்க்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் முழுமையாக பழுது நீக்க முடியாததால் தொடர்ந்து அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையே ஏற்படுகிறது.

பலனில்லை

இந்தநிலையில் விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் இதுகுறித்து பலமுறை சட்டசபையில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகத்திடம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்ட பட்டியலில் இந்த அணை ஷட்டர்கள் பழுது பார்க்க வேண்டும் என்றும் விருதுநகர் எம்.எல்.ஏ. முறையிட்டுள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே தமிழக அரசு, விவசாயிகள் நலன் கருதியும் விருதுநகர் மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாக வேண்டிய அவசியம் உள்ள நிலையிலும் இந்த அணையின் ஷட்டரை உடனடியாக பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அணையின் ஷட்டர் வடிவத்தை மாற்றியமைக்க நிபுணர்களைக் கொண்டு நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story