தண்ணீர் பந்தல் காலனியில் ரோடு, கால்வாயில் வீணாக பாயும் குடிநீர்


தண்ணீர் பந்தல் காலனியில் ரோடு,   கால்வாயில் வீணாக பாயும் குடிநீர்
x
திருப்பூர்


திருப்பூர் தண்ணீர் பந்தல் காலனி பகுதியில் குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரோடு, கழிவுநீர் கால்வாய்களில் குடிநீர் வீணாக பாய்ந்து கொண்டிருக்கிறது.

குடிநீர் குழாய்களில் உடைப்பு

திருப்பூர் அவிநாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனி பகுதியில் தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதேபோல் தற்போதும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே ரோட்டில் குடிநீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. இங்கு அவ்வப்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது குழாய் சீரமைக்கப்படுகின்றது. ஆனாலும், இந்த பணி சரியான முறையில் நடைபெறாத காரணத்தால் மீண்டும், மீண்டும் இப்பகுதியில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக பாய்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது தண்ணீர் பந்தல் காலனியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாகிய பின்னரும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதில் ஒரு பகுதியில் ரோட்டில் நீண்ட தூரத்திற்கு ஆறு போல குடிநீர் பாய்ந்து கொண்டிருக்கிறது.

கால்வாயில் பாயும் குடிநீர்

இதனால் குடிநீர் வீணாவது ஒருபுறமிருக்க, ரோட்டில் பாயும் குடிநீரால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதேபோல், இந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியின் முன்பாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழாயில் இருந்து அதிக அளவிலான குடிநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த குடிநீர் யாருக்கும் பயனின்றி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் நீர்வீழ்ச்சி போல பாய்ந்து கொண்டிருக்கிறது. பல இடங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இங்கு ரோட்டிலும், கழிவுநீர் கால்வாயிலும் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக பாய்ந்து கொண்டிருப்பது பொதுமக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நீண்ட நாட்களாக இங்கு சரி செய்யப்படாமல் இருக்கும் குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Next Story