அத்திக்கடவு-அவினாசி திட்ட குழாய் உடைப்பு
ஊத்துக்குளி அருகே அத்திக்கடவு-அவினாசி திட்ட குழாய் உடைப்பால் பீறிட்டு எழுந்த தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணானது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம்
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் தண்ணீர் தேைவக்கு பயன்படும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இதற்காக அவினாசி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
அவினாசியில் பெரிய அளவில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி வாரச்சந்தை அருகில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்காக குழாய் பதிக்கப்பட்டிருந்தது.
குழாய் உடைப்பு
இந்தநிலையில் அங்கு பதிக்கப்பட்ட குழாயில் நேற்று திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் நீருற்று போல் தண்ணீர் பீறிட்டு வெளியேறி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதி குளம் குட்டைகளுக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் தற்சமயம் குளங்களுக்கு சோதனை அடிப்படையில் நீர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சோதனை ஓட்டத்தின் போது பல்வேறு இடங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்ட குழாய்கள் அதிக அழுத்தத்தின் காரணமாக உடைந்து நீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. அவ்வகையில் நேற்று செங்கப்பள்ளியில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் வாரச்சந்தை அருகே குழாய் உடைந்து நீர் சுமார் 20 அடிக்கு மேலாக பீறிட்டு எழுந்து கொட்டியது. இதனை அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடி பார்த்துச் சென்றனர்