பச்சைமலையில் அருவி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு


பச்சைமலையில் அருவி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
x

தொடர் மழை காரணமாக பச்சைமலையில் அருவி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னணியாறு அணைப்பகுதியில் 74.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

திருச்சி

உப்பிலியபுரம், ஆக.30-

தொடர் மழை காரணமாக பச்சைமலையில் அருவி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னணியாறு அணைப்பகுதியில் 74.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதிகபட்ச மழை

தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் பல இடங்களில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவும் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிக பட்சமாக பொன்னணியாறு அணைப்பகுதியில் 74.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் 487.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வாத்தலை அணைக்கட்டு-73.6, திருச்சி நகரம்-51.3, தா.பேட்டை-35, திருச்சி விமான நிலையம்-28.4, சிறுகுடி-27.3, திருச்சி ஜங்சன்-27.2, மணப்பாறை-24.8, மருங்காபுரி-24.4, கோவில்பட்டி-18.2, பொன்மலை-17.2, தேவிமங்கலம்-17, முசிறி, புலிவலம்-15, கொப்பம்பட்டி-14, நவலூர்குட்டப்பட்டு-7.4, துறையூர்-7, புள்ளம்பாடி, சமயபுரம்-2.4, துவாக்குடி ஐ.எம்.டி.ஐ. 2.1, தென்புறநாடு-2, கல்லக்குடி-1.2 ஆகும். சராசரியாக 20.32 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

உப்பிலியபுரம்

உப்பிலியபுரத்தை அடுத்த பச்சைமலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளிலும், காட்டாறுகளிலும் நீர் வரத்து அதிகரித்துளளது. மங்களம் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் கொல்லிமழையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக புளியஞ்சோலை அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றுப்படுகையிலுள்ள பாறைகள், கல் குவியல்களால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை, வனப்பகுதிக்குள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நுழைய கூடாது என்று மாவட்ட வனத்துறை அலுவலர் (பொறுப்பு) கிரண் தெரிவித்துள்ளார்.


Next Story