நிலப் போர்வை அமைத்து தர்ப்பூசணி சாகுபடி


நிலப் போர்வை அமைத்து தர்ப்பூசணி சாகுபடி
x

உடுமலை அருகே கோடை கால விற்பனையை கருத்தில் கொண்டு நிலப் போர்வை அமைத்து தர்ப்பூசணி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர்

உடுமலை அருகே கோடை கால விற்பனையை கருத்தில் கொண்டு நிலப் போர்வை அமைத்து தர்ப்பூசணி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தர்ப்பூசணி சாகுபடி

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவது இயல்பான ஒன்றாகும். அதுபோன்ற வேளைகளில் உடல் வெப்பத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும் தர்ப்பூசணி, முலாம்பழம், நுங்கு, வெள்ளரி போன்ற பொருட்களுக்கு நல்ல மவுசு இருக்கும். குறிப்பாக கோடை காலத்தில் ரோட்டோரத்தில் குவித்து வைத்து விற்பனை செய்யப்படும் தர்ப்பூசணிப் பழங்களின் சுவைக்கு அடிமையானவர்கள் ஏராளம். தர்ப்பூசணிப் பழங்கள் சாப்பிடுவதற்காகவே கோடை காலத்தை எதிர்பார்ப்பவர்களும் உண்டு. இதனைக் கருத்தில் கொண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விவசாயிகள் அதிக அளவில் தர்ப்பூசணி சாகுபடி செய்வார்கள்.

சொட்டுநீர் பாசனம்

சமீப காலங்களாக வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி விடுவதால் தர்ப்பூசணிப் பழங்களுக்குவரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே தர்ப்பூசணி சாகுபடி செய்வதில் பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் தர்ப்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தர்ப்பூசணி சாகுபடியில் களையைக் கட்டுப்படுத்தவும், பழங்கள் சேதமின்றி சீரான வளர்ச்சி பெறவும் நிலப்போர்வை உதவுகிறது. இதனால் நிலப்போர்வை அமைத்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விவசாயிகள்சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

'தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் நல்ல மகசூல் தருவதுடன் நிறம் மற்றும் சுவை சிறப்பாக இருக்கிறது. ஒரு ஏக்கருக்கு 500 கிராம் விதைகள் போதுமானது. விதைத்து 70 முதல் 80 நாட்களில் அறுவடை மேற்கொள்ள முடியும். ஒரு ஏக்கருக்கு10 முதல் 12 டன் வரை மகசூல் கிடைக்கும். நமது பாரம்பரிய ரகங்களை விட வீரிய ஒட்டு ரகங்களுக்கு பூச்சி மருந்துகள், வளர்ச்சி ஊக்கிகள் என அதிக அளவில் செலவு செய்ய வேண்டியதுள்ளது. அதேநேரத்தில் இதன்மூலம் பல மடங்கு மகசூல் அதிகரிப்பதால் லாபகரமானதாகவே உள்ளது. கோடையின் தீவிரம் தொடங்குவதற்கு முன்பே அறுவடைக்கு தயாராகி விடும் என்றாலும் நீண்ட நாட்களாக காத்திருக்கும் மக்களால் நல்ல விற்பனை மற்றும் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story