குடிநீர் குழாய் அமைக்கும் பணி
திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் இருந்து கோயில் வழி செல்லும் சாலையில் பல வருடங்களாக தார் சாலையானது குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்நிலையில் தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சாலையை சீரமைத்தனர். இந்நிலையில் 4-ம் குடிநீர் குழாய் பதிப்பதற்கு குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல லட்சம் ரூபாய் செலவு செய்து மக்களின் வரிப்பணத்தில் தார் சாலை அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் குடிநீர் குழாய் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைவாக குடிநீர் குழாய் பதிக்கும் பணியை நிறைவு செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.