குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
திருப்பூர்


குமரலிங்கம் பகுதியில் குழாய் உடைந்து வீணாக வழிந்தோடுவதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

குளறுபடி

கோடைகாலம் தொடங்கி விட்டால் பெரும்பாலான குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு குறைந்து விடும்.இதனால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு குடிநீருக்கான போராட்டங்கள் தொடங்கி விடும். ஆனால் சமீப காலங்களாக நீராதாரங்களில் போதிய நீர் இருப்பு இருந்தாலும் குடிநீர் விநியோகத்தில் குளறுபடிகள் நிலவி வருகிறது. இதற்கு குடிநீர்க் குழாய்கள் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியமே முக்கிய காரணமாக உள்ளது. குடிநீர்க் குழாய்களில் ஆங்காங்கே ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க அதிகாரிகள் முனைப்பு காட்டுவதில்லை. இதனால் குழாய் உடைப்புகள் மூலம் பெருமளவு குடிநீர் வீணாகி விடுவதால் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டிய குடிநீரின் அளவு குறைகிறது. அந்தவகையில் குமரலிங்கம் பஸ் நிறுத்தம் முதல் அமராவதி ஆற்றுப்பாலம் வரை பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது.

குழாய் உடைப்பு

மேலும் அமராவதி ஆற்றுப்பாலத்தின் மீது செல்லும் திருமூர்த்தி கூட்டு குடிநீர்த்திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு நீர் வீணாகி வருகிறது.இதனால் கடைக்கோடி கிராமங்களுக்கு குடிநீர் சென்று சேராத நிலை ஏற்படுகிறது. தற்போது கோடையின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் அமராவதி ஆற்றுப்பாலத்தில் குழாய் உடைப்பிலிருந்து தொடர்ச்சியாக குடிநீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் புற்கள் மற்றும் களைச்செடிகள் முளைக்கின்றன. இவை படிப்படியாக பாலத்தின் உறுதித் தன்மையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர்க் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக பயன்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story