கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்:மருத்துவர், பொதுமக்கள் ஆலோசனை
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவர், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்ப்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.
கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-
கரும்புச்சாறு விற்பனை
தேனி மதுரை சாலையில் கரும்புச்சாறு விற்பனை செய்யும் வனராஜா கூறும்போது, 'கோடை காலம் தொடங்கினால் கரும்புச்சாறு விற்பனை சூடுபிடிக்கும். இந்த ஆண்டு கோடை காலத்துக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் விற்பனை நன்றாக இருக்கிறது. கரும்பு தட்டுப்பாடு தான் உள்ளது. 20 கட்டு கரும்பு வேண்டும் என்று வியாபாரியிடம் கேட்டால் 5 முதல் 10 கட்டு தான் கிடைக்கிறது. மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட கரும்புச்சாறு வியாபாரிகள் உள்ளனர்.
சில நாட்களாக பகல் நேரத்தில் மழை பெய்கிறது. மழை பெய்தால் வியாபாரம் பாதிக்கப்படும். திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது ஏற்கனவே சாறு எடுத்து வைத்தால் அவற்றில் தூசி, மழைநீர் விழுந்து வீணாகி விடும். இதனால்,மொத்தமாக சாறு எடுத்து வைப்பது இல்லை. தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சாறு எடுத்துக் கொடுக்கிறேன். இதன் காரணமாக கரும்புச்சாறு எந்திரத்தில் எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. ஒரு டம்ளர் ரூ.20-க்கு விற்பனை செய்கிறேன். கரும்பு விலை, எரிபொருள் செலவு ஆகியவற்றின் உயர்வு காரணமாக இந்த விலை தான் கட்டுப்படியாக உள்ளது' என்றார்.
திரவ உணவுகள்
தேனியை சேர்ந்த கவியரசன்-நந்தினி தம்பதி கூறும்போது, 'தேனி மாவட்டத்தில் முன்பெல்லாம் கோடையின் தாக்கம் இந்த அளவுக்கு இருக்காது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழை தான் வெயிலுக்கு இதமாக இருக்கிறது. உணவுப் பழக்க வழக்கத்தில் பெரிய அளவில் மாற்றம் எதையும் செய்யவில்லை. அதே நேரத்தில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து விட்டு, வீடுகளில் பழச்சாறு தயார் செய்து சாப்பிடுகிறோம்.
சாலையோரம் விற்பனை செய்யும் நுங்கு, இளநீர், கரும்புச்சாறு வாங்கி சாப்பிடுகிறோம். திட உணவுகளை குறைத்துக் கொண்டு திரவ உணவுகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். மதிய நேர வெயிலில் வெளியே சென்று திரும்புவதற்குள் நெருப்பில் குளித்தது போன்று உணர்வு ஏற்படுகிறது' என்றனர்.
மரங்களின் அருமை
தேனியை சேர்ந்த பிரகாஷ்- நந்தினி தம்பதி கூறும்போது, 'கோடை வெயிலை சமாளிக்க குழந்தைகளை ஆபத்து இல்லாத நீர்நிலைகளுக்கு அழைத்துச் சென்று குளிக்க வைக்கிறோம். நீர்நிலைகளில் வெயிலுக்கு இதமாக குளிப்பது மகிழ்வாக இருக்கிறது. குழந்தைகளுக்கு தேவையில்லாதவற்றை வாங்கி தருவதைவிட கோடைக்கு ஏற்ற தர்பூசணி பழம், கிர்ணி பழங்கள் வாங்கி தருகிறோம்.
பழங்களை வீட்டுக்கு வாங்கி வந்து பழச்சாறு தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். வழக்கத்தை விடவும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வீதிக்கு ஒரு மரம் கூட இல்லாமல் போகும் நிலையில் தான் மரங்களின் அருமை மக்களுக்கு புரியத் தொடங்குகிறது. சூரியனின் வெப்பத்தை தணிக்க வீட்டுக்கு ஒரு மரம், வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் மரங்கள் வளர்த்து பூமியை மரங்களின் நிழலால் மூடினால் தான் எதிர்கால தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று நினைக்கிறோம்' என்றனர்.
குடிநீரில் கவனம்
கம்பத்தை சேர்ந்த இதய சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் விஜயசாரதி கூறும்போது, 'கோடை காலத்தில், உடலில் நீர்ச்சத்து குறையாத வகையில், தண்ணீர், இளநீர், மோர் போன்ற திரவ உணவுகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெயிலின் தீவிரம் அதிகம் இருக்கும்போது வெளி வேலைகளை தவிர்க்கவும். முடியாதபோது குடை, தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதோடு எண்ணெய் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்து, மோர் போன்றவற்றை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு இதய நோய்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
கோடைக் காலத்தில் சின்னம்மை, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று வியாதிகளும், நீர் அளவு குறைவதால் ஏற்படும். உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீர்க்கடுப்பு போன்ற பிரச்சினைகளும் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. கோடையில் உடலைக் குளிர்ச்சியாக வைக்க, அதிக அளவில் வியர்வை வெளியேறும். அதனால், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். எல்லா இடங்களிலும் பாதுகாப்பான நீர் கிடைக்குமா என்பது தெரியாது.
எனவே அவசரத்துக்கு கிடைக்கும் தண்ணீரைக் குடிப்பதால், நீர் மூலம் பரவும் வியாதிகளுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. குடிநீரில் கவனமாக இருக்க வேண்டும். எனவே வீட்டிலிருந்து கிளம்பும்போது தண்ணீரை எடுத்துச் செல்வது அவசியம். வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வருகிறது. 'மலேரியா' என்ற கிருமியால் வியர்க்குரு ஏற்படும். இதனை தவிர்க்க தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும் அடர் நிறத்திலான மற்றும் தடிமனான உடை அணியக்கூடாது. பருத்தி ஆடைகளை அணிவது நல்லது' என்றார்.
மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுரை
கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.
குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள். குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.
மருத்துவ உதவியை நாடுங்கள்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.
அதிக நேரம் சூரிய ஒளி
வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.
ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.