போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகள் மரணத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய வழிகள்


போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகள் மரணத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய வழிகள்
x

போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகள் மரணம் அடைவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி, போலீசாருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

சென்னை,

குற்றம் சாட்டப்பட்டவர்களையோ அல்லது சந்தேக நபர்களையோ அடிக்கவோ, துன்புறுத்தல் செய்யவோ கூடாது. இது குறித்து உயர் அதிகாரிகள் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையத்தை தவிர, லாட்ஜூகளிலோ, இதர குடியிருப்புகள் போன்றவற்றிலோ வைத்திருத்தல் கூடாது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை, காவல் நிலையத்தில் வைத்திருக்கும் இலக்கு நேரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் வழங்க வேண்டும். குற்றவாளியை கைது செய்வதற்கு முன்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுவாரா, அவரை நிலைய ஜாமீனில் விடுவதா அல்லது இரவு நேரத்தில் காவலில் வைப்பதா என்பதை முன்கூட்டியே தீர்மானித்து கொள்ள வேண்டும்.

வாக்குமூலம் பெறும்போது...

குற்றவாளிகளிடம் வாக்குமூலம் பெறும்போது, எக்காரணத்தை கொண்டும், வன்முறையை கையாள கூடாது. விஞ்ஞான நுட்ப விவரங்களை கையாள வேண்டும்.

களவு சொத்தை மீட்பதற்கு, குற்றவாளிகளிடம் தேவையற்ற அழுத்தம் தரவேண்டியது இல்லை. கைது செய்யப்படுவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும். உண்மையான சோதனையின்றி, உடற்தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மது, போதைப்பொருளுக்கு அடிமையான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட கூடாது. ஏனெனில் அவர்களுக்கு உரிய போதைப்பொருள் கிடைக்காத பட்சத்தில் இறந்து விடுவார்கள்.

கண்காணிப்பு கேமரா வசதி...

குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்காக, அவர்களது குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது. காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அவை சரியாக வேலை செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story