தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கார் டிரைவர் கைது


தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கார் டிரைவர் கைது
x

தஞ்சையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5½ பவுன் நகை-ரூ.88 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5½ பவுன் நகை-ரூ.88 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

பெண்ணிடம் வழிப்பறி

தஞ்சை பூக்கார முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசுதா (வயது45). இவர் கடந்த 13-ந் தேதி ஒரத்தநாடு அருகே பருத்திக்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்து கிடைத்த ரூ.1 லட்சத்து10 ஆயிரத்தை ஒரு கை பையில் வைத்து எடுத்துக் கொண்டு தஞ்சைக்கு திரும்பினார்.

அவர் வீட்டின் அருகே சாலையில் பிற்பகல் 1 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஜெயசுதாவின் கை பையை பறித்து கொண்டு வேகமாக தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஜெயசுதா அளித்த புகாரின் பேரில், தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கார் டிரைவரிடம் விசாரணை

மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்த வழிப்பறி திருடனின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்களின் உட்ரோ வில்சன் மற்றும் போலீசாரின் தொடர் விசாரணையில் அந்த திருடன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஜெயசுதாவிடம் இருந்து ரூ.1 லட்சத்து10 ஆயிரம் வைத்திருந்த பையை பறித்து சென்றதுடன், சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை பகுதியில் இன்னும் 2 இடங்களில் நடைபெற்ற வழிப்பறி சம்பவங்களிலும் தனது கூட்டாளி ஒருவருடன் இணைந்து மணிகண்டன் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

அடுத்தடுத்து வழிப்பறி

கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதியன்று தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (43) என்பவரிடம் இருந்து 1½ பவுன் சங்கிலியையும், கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரைச் சேர்ந்த சலேத் மேரி என்ற 63 வயது மூதாட்டியிடம் இருந்து 6 பவுன் சங்கிலியையும் மணிகண்டன் தனது கூட்டாளியுடன் இணைந்து பறித்து சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, மணிகண்டனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5½ பவுன் நகைகள், ரூ.88 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக உள்ள இவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story