"தி.மு.க.வுடன் நாங்களும் சமரசம் செய்யமாட்டோம்" பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தி.மு.க.வுடன் நாங்களும் சமரசம் செய்யமாட்டோம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ராமநாதபுரம்,
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை மதிக்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என நம்பு கிறேன்.
சமரசம் செய்யமாட்டோம்
தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக ஏன் இதை சொல்லி இருக்கிறார் என தெரியவில்லை. நாங்களும் அவர்களோடு சமரசம் செய்யமாட்டோம்.
தமிழக மக்களும் தி.மு.க.விடம் சமரசம் செய்ய தயாராக இல்லை. தமிழக மக்களுக்காக தி.மு.க.வை எதிர்த்து போராடுவதற்கு பா.ஜ.க. எப்போதும் தயாராக உள்ளது.
அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் போலீசார் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளார்கள் என தெரியவில்லை. இதேபோல் எல்லா விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளார்களா? இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
எனது காரிலும் செருப்பு வீச்சு
கடந்த 2017-ம் ஆண்டு சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் படித்தபோது உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து அப்போது மத்திய மந்திரியாக இருந்த நான், அவரது உடலை மீட்டு சேலத்தில் ஒப்படைத்துவிட்டு திரும்பியபோது என் மீதும் செருப்பு வீசப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.