எங்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளது - கல்குவாரி, கிரசர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி


எங்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளது - கல்குவாரி, கிரசர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 1 July 2023 1:01 AM IST (Updated: 1 July 2023 5:53 PM IST)
t-max-icont-min-icon

கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 5-வது நாளாக தொடர்கிறது என்றும், எங்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாக கல்குவாரி, கிரசர் லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறினார்.

திருச்சி

கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 5-வது நாளாக தொடர்கிறது என்றும், எங்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாக கல்குவாரி, கிரசர் லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறினார்.

வேலை நிறுத்தம்

கல்குவாரி, கிரசர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சின்னசாமி திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

கடந்த 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது போராட்டத்தால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு வருத்தப்படுகிறோம். யாருடைய தூண்டுதலின்பேரிலும் நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. சட்டவிரோதமாக குவாரி நடத்துபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதற்கு நாங்கள் துணை நிற்போம்.

தற்போது சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் போலியாக நிறையபேர் வந்துவிட்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 20, 30 வருடங்களாக செயல்பட்டு வந்த கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டதாக தற்போது கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கும் சூழல் நிலவி வருகிறது. குவாரிகளில் அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தான் அனுமதி வழங்கியுள்ளார்கள். சமீபகாலமாக புதிய விதிமுறைகளை வகுத்துள்ளார்கள்.

அதில் சில விதிமுறைகளை தளர்த்த வேண்டும். பெரிய குவாரிகளுக்கு மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை இருந்தது. தற்போது சிறிய குவாரிகளுக்கும் அதை நிர்பந்திக்கிறார்கள். இதனால் அனுமதி பெற ஆண்டுக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.

கமிட்டி அமைக்க வேண்டும்

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். அனைத்து கோரிக்கைளையும் உடனடியாக நிறைவேற்ற நாங்கள் வற்புறுத்தவில்லை. ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு மீதமுள்ளவற்றை நிறைவேற்ற ஒரு கமிட்டியை அமைத்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும்.

எங்களது போராட்டத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தமிழ்நாடு கல்குவாரி, கிரசர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story