கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு குடும்பத்தை கவனிக்காததால் கொலை செய்தோம்
கூலி தொழிலாளி கொலை வழக்கில் மனைவி மற்றும் 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர். குடும்பத்தை கவனிக்காமல் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தண்டராம்பட்டு,
கூலி தொழிலாளி கொலை வழக்கில் மனைவி மற்றும் 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர். குடும்பத்தை கவனிக்காமல் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வெட்டிக்கொலை
தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே மோத்தக்கல் ஊராட்சிக்குட்பட்ட குபேரப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 58), கூலி தொழிலாளி.
இவரது மனைவி அன்னக்கிளி (50). இவர்களுக்கு ராதிகா. அமுதா ஆகிய 2 மகள்களும், மணிகண்டன், சக்திவேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
2019-ம் ஆண்டு சக்திவேலுக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவரது மனைவி ஒரு மாதத்திலேயே பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
எனவே தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும்படி சக்திவேல் வற்்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சகாதேவனை மகன்கள் மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
மனைவி- 2 மகன்கள் கைது
இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து 2 மகன்களை கைது செய்து விசாரணை நடத்தினார்.
இந்த கொலையில் அன்னக்கிளிக்கும் சம்பந்தம் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. அவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அன்னக்கிளியும் சேர்ந்து இந்த கொலையை செய்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. எனவே அவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கள்ளத்தொடர்பு
சகாதேவன் சேராப்பட்டு மலைப்பகுதியில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார். மேலும் கள்ளக்காதலிக்கு தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித்து வந்ததோடு மலையிலேயே ஒரு வீட்டையும் சகாதேவன் கட்டிக் கொடுத்துள்ளார்.
இதனால் சகாதேவன் சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவிற்கு கொடுக்காமலும், குடும்பத்தை கவனிக்காமலும் இருந்துள்ளார். இதுதொடர்பாக பலமுறை குடும்ப தகராறு ஏற்பட்டது.
ஆனாலும் சகாதேவன் கள்ளத்தொடர்பை கைவிடுவதாக இல்லை. மேலும் தங்களுக்கு சொந்தமான நிலத்தையும் கள்ளக்காதலிக்கே எழுதி வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தட்டி கேட்ட அன்னக்கிளியையும் சகாதேவன் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். எனவே மனைவி, 2 மகன்கள் சேர்ந்து சகாதேவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சகாதேவன் வீட்டில் இருந்தபோது அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.