தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மகளிருக்கு கடனுதவி
தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 72 ஆயிரத்து 122 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 30 திட்டபணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பாண்டிக்கோவில் ரிங்ரோடு அருகே உள்ள கலைஞர் திடலில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், மேயர் இந்திராணி, கூடுதல் கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தனர். விழாவில் வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன் மற்றும் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இது போன்று ஒரு அரசு விழாவை நான் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. இந்த விழாவை ஏற்பாடு செய்த அமைச்சர் மூர்த்தியை பாராட்டுகிறேன். ஒரு ஆட்சியில் மகளிருக்கு கல்வி, தொழில் வாய்ப்பு, கடன் ஆகியவை எந்தளவுக்கு வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தான் சமுதாயம் முன்னேறும் என்றார்.
மீனாட்சி அருளால்...
அமைச்சர் மூர்த்தி பேசும்போது, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். இந்த விழாவில் ஏறத்தாழ 1 லட்சம் பேருக்கு கடன் உதவி என்பது, அவர்கள் குடும்பத்தினர் வாழ்வில் ஒளிஏற்றுவது போன்றதாகும். முதல்-அமைச்சர் என்ன நினைக்கிறாரோ, அதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்படுத்தி கொண்டு இருக்கிறார். எவ்வளவு நிகழ்ச்சிகளை நான் நடத்தி இருந்தாலும், இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் மிகவும் பெருமை அடைகிறேன். அன்னை மீனாட்சி அருளாலும், முதல்-அமைச்சரின் ஆலோசனையினாலும் இந்த விழா சிறப்பாக நடத்தப்படுகிறது என்றார்.
கோ.தளபதி பேசும் போது, இந்த அரசு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக அமைச்சர் மூர்த்தி கடந்த 20 நாட்களாக தீவிரமாக பணியாற்றி வந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த கலெக்டர் அனிஷ் சேகர் உள்பட அதிகாரிகளை பாராட்டுகிறேன். திறந்த வெளிமாநாடு போல் இந்த அரசு விழா நடக்கிறது என்றார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இது அரசு விழாவா அல்லது ஒரு மாநாடா என்று எண்ணும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நான் அரசு, கட்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் இது போல் ஒரு நிகழ்ச்சியில் இதற்கு முன் நான் கலந்து கொண்டதில்லை. அமைச்சர் மூர்த்தி எதையும் மிக பிரமாண்டமாக செய்பவர். இதற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலினிடமே பாராட்டு பெற்றவர். அவர் தான் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மாநாடு போல் வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதி
இதுவரை நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 75 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் இதனை மக்களிடம் நாங்கள் கொண்டு போய் சேர்க்காதது தான் பிரச்சினை. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்திற்கு தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து போட்டார். இதுவரை, தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் 220 கோடி ேபர் பயணம் செய்துள்ளனர். இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 11 கோடியே 11 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
ஏழை பெண்கள் கல்வியை தொடர புதுமை பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும் 1 லட்சத்து 6 பேர் சேருவதற்கு விண்ணப்பம் வந்துள்ளது. இன்னும் 2 நாளில் அவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும். கொரோனா காலத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்தனர். மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் தான் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 185 பேருக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 37 ஆயிரம் இணைப்புகள் மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து அவர், மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகளை வழங்கினார். முன்னதாக அவர், கலைஞர் திடலில் அமர்ந்திருந்த பெண்களை நேரிடையாக சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பெண்கள், முண்டியடித்து கொண்டு கைகுலுக்கினர். சிலர் அவருடன் செல்பி எடுத்தனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் தாங்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சியையும் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
விழாவில் மகளிர் மேம்பாடு நிறுவன மேலாண் இயக்குனர் திவ்யதர்ஷினி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.