5 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய திட்டங்களை 2 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம்-முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
‘5 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய திட்டங்களை 2 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம்’ என்று சேலத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கருணாநிதி சிலை திறப்பு
சேலம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.சேலத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அன்று இரவில் சேலத்தில் தங்கிய அவர் நேற்று காலை மாநகராட்சி சார்பில் அண்ணா பூங்காவில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் 16 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் ரூ.96.53 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
அரசு விழா
தொடர்ந்து சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் வரவேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மதிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.170 கோடியே 31 லட்சம் மதிப்பில் சுமார் 50 ஆயிரத்து 202 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், அவர் ரூ.1,367.47 கோடி மதிப்பில் முடிவுற்ற 390 பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.235.81 கோடி மதிப்பில் 331 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மனநிறைவுடன் வந்திருக்கிறேன்
நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி நம்முடைய முத்தமிழ் அறிஞர் கருணாநிதி. அவருடைய நூற்றாண்டு விழா தொடங்கிய இந்த நேரத்தில் சேலம் மாநகரில் கலைஞருடைய உருவ சிலையை திறந்து வைத்த மனநிறைவுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஏற்கனவே 27.8.2019 அன்று தி.மு.க. சார்பில் தலைவர் கலைஞருடைய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது, மாநகராட்சி சார்பில் பேரறிஞர் அண்ணா பூங்காவில் தலைவர் கலைஞர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
அண்ணாவின் பூங்காவில் பூத்த மணம் தரும் மலர்தான் தலைவர் கலைஞர். சேலத்திற்கும், தலைவர் கருணாநிதிக்குமான நட்பு என்பது அன்பான நட்பு. ஒரு குடும்ப நட்பு. தலைவர் கலைஞரை ஒரு முழு கதை வசனகர்த்தாவாக ஆக்கிய ஊர் இந்த சேலம்.
இன்றைக்கும் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு கம்பீரமாக காட்சியளித்து கொண்டு இருக்கிறது. அந்த மாடர்ன் தியேட்டர்ஸின் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம். திரைப்படத் தயாரிப்பாளரான அவர் கருணாநிதியை சேலத்துக்கு அழைத்தார். அப்போது கலைஞருக்கு ரூ.500 சம்பளம் கொடுத்தார்கள்.
ஏராளமான திட்டங்கள்
"இங்கே பணியாற்ற வருவதன் காரணமாக எனது இயக்க பணிகள், கட்சி பணிகளுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது" என்று நிபந்தனை வைத்தார். அதற்கு "அப்படி எதுவும் இருக்காது" என்று சுந்தரம் சொன்ன பிறகுதான் கருணாநிதி சேலத்தில் தங்கி பணியாற்ற ஒப்புக் கொண்டார். அப்படி பணியாற்ற தொடங்கிய நேரத்தில் வெளிவந்த படம்தான் 'மந்திரிகுமாரி'. தலைவர் கலைஞர் சேலத்தில் தங்கி இருந்த அந்தக் காலக்கட்டத்தில்தான் 1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகமே உருவானது. கழகத்தின் தொடக்க விழாவுக்கு சேலத்தில் இருந்துதான் அவர் சென்னைக்கு சென்றார் என்பது வரலாறு.
அந்த அளவுக்கு அவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஊர் தான் சேலம். இத்தகைய சேலம் மாவட்டத்துக்கு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது மறைந்த ஆருயிர் அண்ணன் சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகத்தால் இந்த சேலம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதை என் நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்லமுடியும்.
நிரந்தர கட்டிடம்
எனவே இந்த அரசை பொறுத்தவரையில் 'சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்' என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். ஆட்சி அமைத்தது முதல் மாவட்டங்கள் தோறும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களையும், திட்டங்களைத் தொடங்கும் விழாக்களையும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் விழாக்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சுற்று நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துவிட்டது. இப்போது சேலம் தொடங்கி அடுத்த சுற்று நிகழ்ச்சிகளை தொடங்கப் போகிறோம். மேலும், ரூ.101 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கான மாணவ, மாணவிகள் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சேலம் பழைய பஸ் நிலையத்தை ரூ.96 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் ஈரடுக்கு பஸ் நிலையமாக மறுசீரமைத்து 'முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு மாநகர பேருந்து நிலையம்' என பெயர் சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ரூ.236 கோடியில்...
இதுதவிர, பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம், வ.உ.சி மார்க்கெட், நேரு கலையரங்கம் ஆகியவற்றை மறுசீரமைக்கும் பணிகள் என இன்றைக்கு மட்டும் ரூ.1,367 கோடி மதிப்பில் 390 பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.236 கோடி மதிப்பிலான 331 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக 50 ஆயிரத்து 202 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இப்படி அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் மனதில் வைத்துச் செயல்படும் அரசாக நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
நானும் டெல்டாகாரன்
புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 750 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உழவர்கள் பயனடைந்து வருகின்றனர். இப்படி இந்த அரசால் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போனால் நேரம் போதாது. இவை அனைத்திற்கும் மேலாக, முத்தாய்ப்பாக உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நாளை (அதாவது இன்று) தண்ணீரை திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மூன்றாவது ஆண்டாக குறித்த நேரத்தில் பயிர் சாகுபடிக்குத் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. இதற்காக நானும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் நானும் ஒரு டெல்டாகாரன் என்ற அடிப்படையில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நிதி நெருக்கடி
சேலம் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து எண்ணற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் இந்த அரசு எப்போதும் முனைப்பாக உள்ளது. அதற்காகத்தான் மூத்த அமைச்சராக இருக்கக்கூடிய கே.என்.நேருவை இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்து இந்த பொறுப்பை அவரிடத்திலே கொடுத்திருக்கிறோம்.
10 ஆண்டு காலம் இந்த தமிழ்நாடு எந்த வகையில் எல்லாம் பாழ்பட்டுக் கிடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட்டு விட்டார்கள் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள். நிதி உரிமையைத் தாரைவார்க்கும் ஜி.எஸ்.டி. உரிமையை இழந்தோம். அதனால்தான் இன்றைக்கு நிதி போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை. நிதி நெருக்கடியில் தவிக்கிறோம். உதய் என்ற திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கையெழுத்து போட்டதால்தான் மின்கட்டணத்தை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மாற்றி அமைக்க வேண்டிய நெருக்கடி இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் மக்களையும் பாதிக்காத வகையில் அதே நேரத்தில் நிதி மேலாண்மையையும் உயர்த்திக் காட்ட வேண்டிய சூழல் இந்த அரசுக்கு ஏற்பட்டது. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைத்தோம். அதேநேரத்தில் புதிய திட்டப்பணிகளையும் ஏராளமாகத் தொடங்கி கொண்டிருக்கிறோம். நிதி இல்லை என்று காரணம் காட்டி புதிய திட்டங்களை அறிவிக்காமல் இருக்கவில்லை.
'நம்பர் ஒன் தமிழ்நாடு'
கடந்த 2 ஆண்டுகாலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் பார்த்தீர்கள் என்றால், 5 ஆண்டுகளில் அறிவிக்க வேண்டிய அளவிற்கான திட்டங்களை 2 ஆண்டுகளில் அறிவித்து நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். அதனால் தான் 'நம்பர் ஒன் தமிழ்நாடு'.
'நம்பர் ஒன் முதல்-அமைச்சர்' என்று என்னை முதல் ஆண்டில் சொன்னார்கள். என்னை 'நம்பர் ஒன் முதல்-அமைச்சர்' என்று சொல்வதைவிட 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்ற பெயரை எடுக்க வேண்டும் அதுதான் எனக்கு சிறப்பு என்று சொன்னேன். அந்த பெருமையை இன்றைக்கு அடைந்திருக்கிறோம். இது ஏதோ என்னால் ஆனது என்று நினைக்கவில்லை. இது அமைச்சர்கள், அரசு அலுவலர்களால், மக்கள் பிரதிநிதிகளால், அவர்களது ஒத்துழைப்போடு, அந்த வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்டதால்தான் இத்தகைய சாதனையை நம்மால் செய்ய முடிந்திருக்கிறது.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அண்மையில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு நான் சென்றிருந்தேன். சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள பெரும்பாலான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.
திராவிட மாடல் ஆட்சி
இந்தியாவில் தமிழ்நாடும், குறிப்பாக சென்னையும் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மையமாக அமைந்திருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. எனவே நாம் அவர்களுக்கு தமிழ்நாட்டை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் போல அல்லாமல் இப்போது நடைபெறும் நமது திராவிட மாடல் ஆட்சியில் தொழில் வாய்ப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் ஏற்ற சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டி தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் நேரடியாகச் சென்று அழைப்பு விடுத்தோம். அழையா வீட்டுக்கு எந்த விருந்தாளியும் வரமாட்டார்கள்.
நம்முடைய மாநிலத்தில் நிலவும் சூழல் அரசு செயல்படுத்தி வரும் முன்னேற்றத் திட்டங்கள், வளமான எதிர்காலத்தை நோக்கி நாம் நடைபோடும் பாதை, நம்முடைய படித்த இளைஞர் வளம் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டினால்தான் முதலீட்டாளர்கள் ஆர்வத்தோடு நம் மாநிலத்துக்கு வருவார்கள். அப்படி முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும் நிறுவனங்கள் நேரில் நம்முடைய கட்டமைப்புகளைப் பார்த்து ஆய்வு செய்து முதலீடுகளைச் செய்வார்கள். ஆனால் அதனைக் கூட தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் கொச்சைப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு கொச்சைப்படுத்த மட்டும்தான் தெரியும். எதையும் ஆக்கத் தெரியாது. அழிக்கத்தான் தெரியும். அந்த வேலையைத்தான் அவர்கள் செய்கிறார்கள். செய்யட்டும், நான் கவலைப்படவில்லை.
பதில்சொல்ல எனக்கு நேரமில்லை
'போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்' என்று நினைத்து கடந்து செல்பவன் நான். கலைஞர் வழியில் வந்தவன் நான். மக்கள் பணியாற்றவே நேரமில்லை. மக்களுக்கு பிணியாக இருப்பவர்களுக்கு பதில்சொல்ல எனக்கு நேரமில்லை. 5 முறை தமிழ்நாட்டை ஆண்ட முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கான மாபெரும் திட்டங்களைத் தீட்டிக் காட்டி கலைஞரே இன்னும் ஆள்கிறார், வாழ்கிறார், வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார் என்ற பெயர் வாங்குவோம். அதனால் தான் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவோம் என்று அறிவித்து, அதனை நாம் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.
நம்முடைய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் எடுத்துச் சொன்ன அந்த கருத்தின் அடிப்படையிலே தொடர்ந்து இந்த அரசுக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள். இன்னும் எண்ணற்ற திட்டங்களை உங்களுக்கு நிறைவேற்றித் தர இந்த திராவிட மாடல் அரசு காத்திருக்கிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த விழாவில், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், துணை மேயர் சாரதாதேவி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.