விவசாயிகளுக்கு முழுஅளவில் கொண்டு சேர்க்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்


விவசாயிகளுக்கு முழுஅளவில் கொண்டு சேர்க்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு திட்டங்களின் பயன்களை விவசாயிகளுக்கு முழுஅளவில் கொண்டு சேர்க்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வேளாண்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, மலைப்பயிர்கள் துறை சார்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்ட செயல்பாடு குறித்து மாவட்ட அளவிலான செயலாக்கக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 13 வட்டாரங்களில் 1,700 ஹெக்டேர் நிலங்களுக்கு ரூ.19.43 கோடி மதிப்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்டம் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 658.82 ஹெக்டேர் நிலங்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதில் 436.32 ஹெக்டேர் நிலங்களுக்கு நுண்ணீர் பாசன திட்டம் ரூ.10.4 கோடி மதிப்பில் அனுமதி பெறப்பட்ட 39 நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இடுபொருட்கள்

தோட்டக்கலைத்துறை சார்பில் 4,267 ஹெக்டேர் நிலங்களுக்கு ரூ.43.88 கோடி மதிப்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 757.09 ஹெக்டேர் நிலங்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதில் 527.38 ஹெக்டேர் நிலங்களில் 60 சதவீத மானியத்தொகையாக ரூ.3.39 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இலவலப்பாக்கம் அரசு தோட்டக்கலை பண்ணையில் உயர் தொழில்நுட்ப நாற்றாங்கால் பண்ணை ரூ.9.62 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீரியரக காய்கறிகள், கொய்யா, பப்பாளி, எலுமிச்சை, சம்பங்கி, மிளகாய், முந்திரி, உதிரிமலர்கள் போன்றவை விவசாயிகளுக்கு கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. 11 தனிநபர்களுக்கு நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த தலா ரூ.75 ஆயிரம் வீதம் பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்களும், 25 சதவீத மானியத்தில் ஒரு விவசாயிக்கு மினி டிராக்டர் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்து பணியாற்ற...

அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்களை தகுதியான, தேவையான விவசாயிகளுக்கு முழு அளவில் கொண்டு சேர்த்திட வேளாண்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செலவினை குறைத்து, கூடுதலான வருவாய் ஈட்ட வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பெரியசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story