"எங்களது மாடுகளை நாய்கள் விட்டு கடிக்க வைத்ததால் கொன்றோம்"- விவசாயி கொலையில் கைதான அண்ணன்- தம்பி வாக்குமூலம்


தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் நடந்த விவசாயி கொலையில், அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். எங்களது மாடுகளை நாய்கள் விட்டு கடிக்க வைத்து தொடர்ந்து இடையூறு செய்ததால் வெட்டிக் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடியில் நடந்த விவசாயி கொலையில், அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். எங்களது மாடுகளை நாய்கள் விட்டு கடிக்க வைத்து தொடர்ந்து இடையூறு செய்ததால் வெட்டிக் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

விவசாயி கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி, அம்பேத்கர் முதல் ெதருவைச் சேர்ந்தவர் மைதுகனி (வயது 46). இவர் கோட்டமலை பகுதியில் உள்ள வயலை 7 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், முருகேசன், சக்திவேல் (22) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மைதுகனிக்கு உதவியாக சக்திவேல் விவசாய வேலைகளை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வயலுக்கு சென்ற மைதுகனி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வாக்குமூலம்

இச்சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பக்கத்து வயல்காரரான புளியங்குடி நடுத்தெருவைச் சேர்ந்த குருவையா (45), அவரது தம்பி சின்ன மாரியப்பன் (40) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

மைதுகனிக்கு பக்கத்து வயல், எங்களது சொந்த வயல் ஆகும். இந்த வயலில் நாங்கள் நெல் பயிரிட்டு வந்தோம். எங்கள் வயலுக்கு அருகில் மைதுகனியின் 2-வது மகன் சக்திவேல் அடிக்கடி நண்பர்களுடன் வந்து சமையல் செய்து சாப்பிட்டு அதன் கழிவுகளை எங்கள் வயலில் போட்டு வந்தார். இதைத் தட்டிக் கேட்டபோது எங்களை தாக்கினார். மேலும் மைதுகனி வளர்த்து வந்த வேட்டை நாய்களை எங்கள் வயல்களுக்கு விரட்டி, நாங்கள் வளர்த்து வந்த கோழி மற்றும் மாடுகளை கடித்துக் குதறச் செய்தார். நாங்கள் போலீசில் புகார் கொடுத்து அவர்கள் எச்சரித்தும், எங்களது வயலில் புகுந்து மைதுகனியும், அவரது மகன் சக்திவேலுவும் தொடர்ந்து இடையூறு செய்து வந்தனர். இதனால் மைதுகனி தனியாக இருந்ததை நோட்டமிட்டு கொலை செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story