அனைத்து சமுதாய மக்களும் நமக்கு தேவை
அனைத்து சமுதாய மக்களும் நமக்கு தேவை என்று ஆரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ேபசினார்.
ஆரணி
அனைத்து சமுதாய மக்களும் நமக்கு தேவை என்று ஆரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ேபசினார்.
புதிய நிர்வாகிகள்
ஆரணி அம்பேத்கர் நகரில் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. இன்று கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கட்சியில் 7 ஆண்டு காலமாக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளனர். புதிய கட்சி நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல், அதையடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை கட்சி ரீதியாக 100 மாவட்டங்களாக பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களாக பிரிக்கப்படும்
திருவண்ணாமலை மாவட்டம் 4 மாவட்டங்களாக பிரிக்கப்படும். சாதி கட்சி, என்பதை அரசியல் கட்சியாக உருவெடுக்க நாம் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
தலித் அல்லாதவர்களை கட்சியில் இணைப்பதும், அவர்களுக்கு பொறுப்பு வழங்குவதும் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அனைத்து சமுதாய மக்களும் நமக்கு தேவை.
ஆரணி பகுதியில் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு நமது கட்சியை சார்ந்த 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 20 பேர் சிறை சென்றனர்.
இதனால் மாவட்ட செயலாளராக இருந்த எம்.கே.பாஸ்கரனை தற்காலிகமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வரும் வரை எம்.கே.பாஸ்கரனை மீண்டும் மாவட்ட செயலாளராக அறிவிக்கிறேன்.
தமிழக முதல்-அமைச்சரிடம் காவல்துறை குறித்து தனி கவனம் செலுத்தி பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.