பேரிடரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்


பேரிடரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்
x

தென்மேற்கு பருவமழையை ஒட்டி பேரிடைர எதிர்கொள்ள அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

நீலகிரி

ஊட்டி,மே.31-

தென்மேற்கு பருவமழையை ஒட்டி பேரிடைர எதிர்கொள்ள அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரியில் தென்மேற்கு பருவமழையால் பேரிடர் பாதிப்பு ஏற்படாமல் எதிர்கொள்வது தொடர்பாக வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, வனத்துறை, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

மலைப்பிரதேசமாக உள்ளதால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். காற்றின் வேகம் அதிகரிக்கலாம். இதனால் மரங்கள் விழக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பொக்லைன் எந்திரங்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தயாராக இருக்க வேண்டும்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், ஆம்புலன்ஸ், மருந்து இருப்பு வைக்க வேண்டும். மின்கம்பங்கள் அருகே உள்ள மரக்கிளைகளை அகற்றி மின்சார வாரியத்தினர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க தயாராக இருக்க வேண்டும்.மேலும் தாசில்தார்கள் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதுடன், அங்கு அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளில் பேரிடர் காலத்தில் தூய்மை பணிகள், மரம் அறுக்கும் எந்திரங்களை கொண்டு பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஆர்.டி.ஓ.க்கள் துரை, சரவண கண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story