தூத்துக்குடியை குற்றங்கள் இல்லாத மாவட்டமாக்க ஒத்துழைக்க வேண்டும்
தூத்துக்குடியை குற்றங்கள் இல்லாத மாவட்டமாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று யூ-டியூபர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தை குற்றங்கள் இல்லாத கிராமங்களாகவும், அமைதியான மாவட்டமாகவும் மாற்றுவதற்கு உறுதுணையாக யூடியூபர்கள் சைபர் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் உள்பட பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நேர்மறையாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விழிப்புணர்வு ஏற்படுத்த...
தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பகுதிநேர வேலை வாங்கி தருவதாகவும், ஆன்லைனில் டிரேடிங் கம்பெனி மூலம் அதிக லாபம் பெறலாம் என்றும், ஆன்லைனில் முதலீடு செய்து அதிக வட்டி மூலம் அதிக பணம் பெறலாம் என்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து பொதுமக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.
அவ்வாறு நினைக்கும் சைபர் குற்றவாளிகள், பொதுமக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை உணரும் வகையில், யூடியூபர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நேர்மறையான செய்திகள்
தனிநபர் புகைப்படங்களை வைத்து அவர்களை அவமானப்படுத்தும் வகையில் மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவது, வன்முறையை தூண்டும் வகையில் சாதி, மத ரீதியான மோதலை உருவாக்கும் விதமாக ஆடியோ, வீடியோ மற்றும் மீம்ஸ் பதிவிடுவது அல்லது மற்றவர்களுக்கு பகிர்வது, செய்திகளின் உண்மை தன்மைக்கு புறம்பாக வதந்திகள் பரப்புவது போன்றவை சட்டத்திற்கு புறம்பானதாகும்.
பெண்களுடைய புகைப்படங்களை தேவையில்லாமலோ, அவதூறாகவோ சமூக வலைதளங்களில் வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்குவதற்கு வழிவகை உண்டு. எனவே யூடியூபர்கள் நேர்மறையான செய்திகளை பதிவிட்டு தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், கோடிலிங்கம் மற்றும் யூடியூபர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சைபர் குற்றப்பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு உன்னி கிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகரன், அச்சுதன், அபிராமி மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் செய்திருந்தனர்.