சுங்கச்சாவடி ஊழியர்களிடம் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்


சுங்கச்சாவடி ஊழியர்களிடம் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்
x

கொடைரோடு சுங்கச்சாவடி ஊழியர்களிடம், நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம் செய்தனர்.

திண்டுக்கல்

கொடைரோடு சுங்கச்சாவடி

நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடியில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கோவையில் இருந்து ஒரு பஸ்சில் நாம் தமிழர் கட்சியினர் புறப்பட்டனர்.

அவர்கள் வந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடிக்கு நேற்று காலை 5.50 மணிக்கு வந்தடைந்தது. சுங்கசாவடியில் பணியில் இருந்த ஊழியர்கள் பஸ்சை நிறுத்தினர்.

அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பஸ்சை எப்படி நிறுத்தலாம்? என்றும், நாம் தமிழர் கட்சி கொடியுடன் வருவது தெரியவில்லையா? என்றும் அவர்கள் கூறினர். அதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள், பஸ்சின் பதிவு எண்ணை குறிப்பதற்காக தான் நிறுத்தினோம் என்றனர்.

நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

இதற்கிடையே சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுங்கச்சாவடியின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு கட்டணம் செலுத்தாமல் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தினால் கொடைரோடு சுங்கச்சாவடியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சியினர் பயணம் செய்த பஸ்சின் பதிவு எண் மீது, பேப்பரை ஒட்டி மறைத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story