எங்கள் மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும்


எங்கள் மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும்
x

ரூ.11½ லட்சம் கொடுத்தால்தான் உடலை கொடுப்போம் என திருச்சி தனியார் ஆஸ்பத்திரி நிர்பந்தம் செய்வதாகவும், எங்களது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும் எனவும் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்து விடடு கதறி அழுதனர்.

திருவாரூர்

ரூ.11½ லட்சம் கொடுத்தால்தான் உடலை கொடுப்போம் என திருச்சி தனியார் ஆஸ்பத்திரி நிர்பந்தம் செய்வதாகவும், எங்களது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும் எனவும் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்து விடடு கதறி அழுதனர்.

கலெக்டர் அலுவலகத்தில் கதறி அழுதனர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் வீரப்பன். கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி அனிதாவுடன் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அப்போது தனது மகனின் உடலை திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டு தரும்படி கூறி கதறி அழுதனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சிறுநீரக கோளாறு

எங்களது மகன் யுவனேஷ், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டதால் அவனை கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.அங்கு எங்களது மகனுக்கு 53 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ரூ.9 லட்சம் கட்டணம் செலுத்தியுள்ளோம்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில் நேற்று காலை யுவனேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மேலும் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால்தான் மகனின் உடலை தருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நிர்பந்தம் செய்கின்றனர்..

எங்கள் குடும்ப சூழ்நிலையில் இவ்வளவு பெரிய தொகையை கட்ட இயலாது. எனவே மாவட்ட நிர்வாகம், எங்கள் மகனின் உடலை தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

சோகத்தை ஏற்படுத்தியது

தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்து விட்டு கதறிய அழுத சம்பவம் அங்கிருந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story