சனாதனத்தை ஒழிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


சனாதனத்தை ஒழிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

சனாதனத்தை ஒழிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என நெய்வேலியில் நடைபெற்ற திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நெய்வேலி,

100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. மருத்துவ படிப்பு படிக்க முடியாது. மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாது. கணவர் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏற வேண்டும். இதையெல்லாம் உடைத்தது தி.மு.க. தான். இதற்காக அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். சனாதனம் குறித்து அவர்கள் பேசியதை மட்டுமே நான் பேசியிருக்கிறேன். இதை நீங்கள் உணர வேண்டும். 200 ஆண்டுகளாக நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த சனாதனத்தை ஒழிக்கத்தான், நம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள். சனாதனத்தை ஒழிக்க இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

இந்தியா பெயர் மாற்றம்

நான் பேசியதை பொய்யாக திரித்து இனப்படுகொலைக்கு எதிராக பேசினேன் என பரப்பி வருகின்றனர். உண்மையான இனப்படுகொலை 5 மாதமாக மணிப்பூரில் நடைபெற்று வருகிறது. இதுபற்றி பிரதமர் வாய் திறக்கவில்லை.

மாறாக இந்தியாவை நான் மாற்றி காட்டுகிறேன் என சொன்னார். அதேபோல் இந்தியா பெயரை பாரத் என்று மாற்றியுள்ளார். இப்போது யாரும் இந்தியா என்று அழைக்கக்கூடாது. ஏனென்றால் நாம் இந்தியா கூட்டணி என பெயர் வைத்துள்ளோம். இப்படிப்பட்ட கேடுகெட்ட ஒரு ஆட்சி தான் மோடி அரசு.

ஊழலை மூடி மறைப்பதற்காக...

இன்று ஜி-20 மாநாட்டுக்கு உலக தலைவர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். டெல்லியில் உள்ள குடிசை பகுதிகள் எல்லாம் தெரியக்கூடாது என பெரிய அளவில் பச்சை நிறத்தில் டிஜிட்டல் பேனர் வைத்து மறைத்துள்ளனர். இதுதான் ஒன்றிய அரசின் மாற்றம்.

9 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க.வின் ஊழல் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக தான் நான் பேசிய சனாதனத்தை பொய் புகாராக வைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களின் அடிமை அ.தி.மு.க.வையும் சேர்த்து ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அவா் கூறினார்.


Next Story