தமிழகத்தில் திருச்சியை முதன்மை மாவட்டமாக நிச்சயம் கொண்டு வருவோம்; அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
தமிழகத்தில் திருச்சியை முதன்மை மாவட்டமாக நிச்சயம் கொண்டு வருவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டத்திலும், நான் நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்பதைவிட இந்த தமிழ்நாடு நம்பர் ஒன் தமிழ்நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டு கொண்டு இருக்கிறேன் என்று கூறுவார். அதேபோல் என்னிடம் சொல்லும்போது, சென்னை, மதுரை, கோவை என்று இருப்பதை மாற்றி, சென்னை, திருச்சி, கோவை, மதுரை என்று வர வேண்டும் என்றும், அனைத்திலும் திருச்சி முன்னிலையில் வர வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். காரணம், திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஆகவே மற்ற மாவட்டங்களை காட்டிலும் தமிழகத்தில் முதன்மையான மாவட்டமாக திருச்சியை நிச்சயம் கொண்டு வருவோம்.
ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் பணிக்காலத்தில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும்போது, அது நாட்டு மக்களுக்கு மிகுந்த பயன்களை சேர்க்கும். எனக்கு திருச்சியும், சேலமும் பொறுப்பு கொடுத்து இருக்கிறார்கள். இந்த 2 மாவட்டங்களையும் அதிக பயன்களை பெறுகிற மாவட்டமாக கொண்டு வருவோம். திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்னும் ஓராண்டில் பெரிய அரங்கம் கட்டப்படும். மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். ஏழை, எளிய மக்களுக்கு அதிக அளவில் பட்டா வழங்கிய மாவட்டம் திருச்சிதான். இன்னும் ஓரிரு மாதங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிகளுக்கும் திட்டங்களை தருவதாக உறுதி கூறி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பேசியதாவது:-
24 ஆயிரம் பேருக்கு பட்டா
முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, 85 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவுக்கும் தீர்வு காணும்போது, அதற்கு தரமதிப்பீடு செய்வது அவசியம். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தான் மாநிலத்திலேயே அதிகப்படியாக தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் திருச்சி மாவட்டத்தில் 24 ஆயிரத்து 467 வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் 3-வது இடத்தில் உள்ளது. விளிம்புநிலை மக்களுக்கு பட்டா வழங்கியதில் திருச்சி முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 872 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இல்லம்தேடி கல்வி திட்டம் மூலம் 1 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள். மகளிருக்கான கட்டணமில்லா பஸ் பயணம் மூலம் 13.4 கோடி பெண்கள் பயனடைந்துள்ளார்கள். 2 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் மாவட்டத்தில் ரூ.237 கோடி மதிப்பில் 63 ஆயிரத்து 718 பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரம் பயனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்லூரியில் சேரும்போது, மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 8,959 மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 94 லட்சம் மதிப்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் மற்றும் உழவர்நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை, சமூகநலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 12 ஆயிரத்து 734 பயனாளிகளுக்கு ரூ.63 கோடியே 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் மேயர் அன்பழகன், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, தியாகராஜன், சவுந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், ஸ்டாலின்குமார், கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், உதவி ஆணையர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி வரவேற்றார். முடிவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் தேவநாதன் நன்றி கூறினார்.