இந்தி திணிப்பை துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் -அன்புமணி ராமதாஸ் பேட்டி


இந்தி திணிப்பை துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் -அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

இந்தி திணிப்பை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பா.ம.க. புதிய நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. கட்சி தொடங்கி, 18 வருடங்களில் ஆட்சிக்கு வந்தார்கள். அ.தி.மு.க. கட்சி தொடங்கி 6 வருடங்களில் ஆட்சிக்கு வந்தனர். நாம் கட்சி தொடங்கி 34 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை. நம்மிடம் அனைத்து திறமைகள் இருந்தும் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் 2026-ல் நிச்சயமாக தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி நடக்கும்.

ஆகவே நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை களைய வேண்டும். புதிய பொறுப்பாளர்கள் வேகமாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆபத்தானது

முன்னதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இது அபத்தமானது, ஆபத்தானது. இந்தி திணிப்பை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், கடுமையாக எதிர்ப்போம்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 50 விழுக்காடுகள் கூட முடிக்கப்படவில்லை. ஆனால் 95 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறுகின்றனர். இன்னும் 10 நாட்களில் வடகிழக்கு பருவமழை வருகிறது. எனவே விரைந்து ஏரிகளை தூர்வாரி, தண்ணீரை சேமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story