மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்


மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்
x
தினத்தந்தி 22 July 2023 1:00 AM IST (Updated: 22 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.

திண்டுக்கல்

வளர்ச்சி திட்ட பணிகள்

தாடிக்கொம்பு பேரூராட்சி, அகரம் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கூறியதாவது:-

மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தாடிக்கொம்பு பேரூராட்சியில் சுமார் ரூ.6 கோடியில் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்படுகின்றன. மாவட்டத்தில் முதல் முறையாக தாடிக்கொம்பு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பாலப்பணிகளை முழுமையாக நிறைவேற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நீரை பெறுவது என்பது தமிழக அரசின் உயிர் மூச்சாக உள்ளது. உரிமைகளை விட்டுக்கொடுத்து அணைக்கட்ட அனுமதிக்க முடியாது.

தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சி

தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைத்தல் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதித்தல் உள்பட மொத்தம் ரூ.3.57 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், அகரம் பேரூராட்சி பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் வடிகால் வசதியுடன் தார்சாலை உள்பட மொத்தம் ரூ.2.47 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா, அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், ரெட்டியார்சத்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், தாடிக்கொம்பு பேரூர் செயலாளர் ராமலிங்க சுவாமி, துணைச்செயலாளர் இன்னாசி, தாடிக்கொம்பு பேரூராட்சி துணைத்தலைவர் நாகப்பன்.

அகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயபால், தாடிக்கொம்பு மற்றும் அகரம் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சந்தனம்மாள், சூசை இன்பராஜ், பேரூர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் அருள், ராஜூ, செல்வராஜ், தாமஸ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story