மண்ணையும், மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் -அன்புமணி ராமதாஸ் பேட்டி
“மண்ணையும், மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
நெல்லை,
தாமிரபரணி ஆறு, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சென்னை கூவம் போல மாறும் முன்பு தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும். தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக சிலர் பேசி வருகிறார்கள். அதனை முதல்-அமைச்சர் உறுதிப்படுத்திவிட கூடாது.
என்.எல்.சி. பிரச்சினை இந்த நாட்டின் பிரச்சினை. இன்று மண்ணை அழித்துவிட்டால் நாளை சாப்பிட சோறு கிடைக்காது. இந்த நிலம் காப்பாற்றப்படும்வரை பா.ம.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். மண்ணையும், மக்களையும் காப்பாற்ற நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம். அந்த நிலங்களை விவசாயிகளுக்கே அரசு திரும்ப வழங்க வேண்டும்.
வரவேற்கிறேன்
நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்கள் மது அருந்தக்கூடாது என்று பேசி உள்ளார். அதனை நான் வரவேற்கிறேன். இவர் கூறியது ரசிகர்களுக்கு மட்டும் அல்ல. பொதுமக்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போதாவது தமிழக அரசு மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். அல்லது படிப்படியாக செயல்படுத்த வேண்டும்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழகத்தில் கஞ்சா கலாசாரத்தை ஒழிக்க போதிய காவலர்களை நியமிக்க வேண்டும். போதை பழக்கத்தை ஒழிக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.