நம்மைக்காப்போம் நிகழ்ச்சி; அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் அரசு மருத்துவ கல்லூரியில் நம்மைக் காப்போம் நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் அரசு மருத்துவ கல்லூரியில் நம்மைக் காப்போம் நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
புத்தகம் வெளியீடு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறை சார்பில் தொடர் கல்வி பயிலரங்க நிகழ்ச்சியான "நம்மைக் காப்போம்- 23" என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது. அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த இந்த விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகத்தினை வெளியிட்டார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
உதவிகரமாக இருக்கும்
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனையின்படி பாதுகாப்பான அறுவை சிகிச்சைகள் செய்வது தொடர்பாக பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சியில் மாவட்டத்தில் இருந்து 520 பேர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அளவில் முதன்முதலாக நம்மைக் காப்போம் 23 நிகழ்ச்சியை நடத்துவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில்தான். இங்கு வழங்கப்படும் மருத்துவக்குறிப்புகள், மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு செல்லும்போது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கடவுளைப்போல் மருத்துவர்கள் நம்மை காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் மருத்துவர்களை சந்திக்கின்றனர். மருத்துவத்துறையில் ஈடுபட வேண்டுமென்றால் நிறைய அர்ப்பணிப்பு, தியாகங்கள் செய்ய வேண்டும். மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்த உங்களின் சமுதாயம் மற்றும் பணியின் மீது அக்கறையை புரிந்துகொள்ள முடிகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிவக்குமார், முடநீக்கியல் துறைத்தலைவர் பாவலன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பணி நியமன ஆணை
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெனட் வெனிஷ்டா, அந்தோணியம்மாள், கீதா, முகுகேஸ்வரி ஆகிய 4 பேருக்கு அங்கன்வாடி பணியாளர்களாக நியமன செய்த ஆணைகளை வழங்கினார்.