தஞ்சைக்கு 24-ந்தேதி வருகை தரும் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டுவோம்
தஞ்சைக்கு வருகிற 24-ந்தேதி வருகை தரும் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி கூறினார்.
தஞ்சைக்கு வருகிற 24-ந்தேதி வருகை தரும் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி கூறினார்.
கவர்னருக்கு கருப்புக்கொடி
தஞ்சையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:-
தமிழக கவர்னர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பேசி வருகிறார். ஆர்.எஸ்.எஸ், சங்க்பரிவார் அமைப்புகளின் முகவர் போலவும், அரசியல்வாதி போலவும் அவரது பேச்சுக்கள் உள்ளது. கவர்னர் பொறுப்பு அரசியல் சாசனம் சார்ந்த பொறுப்பு. அதை மீறி அவர் செயல்படுகிறார். குறிப்பாக மார்க்சியத்தை தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.
எனவே அவர் போகிற இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவது என்கிற முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எடுத்துள்ளது. இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி(திங்கட்கிழமை) தஞ்சை வரும் கவர்னருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்பது என முடிவு செய்துள்ளது.
அறிவிக்கப்படாத மின்வெட்டு
கோடை தொடங்கியுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டு தவிர்க்கப்பட வேண்டும். ஜூன் 12-ந ்தேதி பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பாக பாசன வாய்க்கால்கள், நீர்நிலைகள் முழுமையாக இந்த மாதத்திலேயே தூர்வாரப்பட வேண்டும்.
திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் பிரச்சினையில் அரசு உடனடியாக தலையிட வேண்டும். பல இடங்களில் வீட்டுமனைப் பட்டா கேட்டு முதியோர், விதவை, ஓய்வூதியத் தொகை கேட்டு மனு கொடுத்து காத்திருக்கிறார்கள். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தவர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு இதனை முறைப்படுத்த வேண்டும்.
விசாரணைக்குழு
தமிழகத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் என்பது அதிகரித்து வருகிறது. எனவே உள்ளக விசாரணைக் குழு அனைத்து இடங்களிலும் முறையாக அமைக்கப்பட வேண்டும். தமிழக அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாக சட்டமன்றத்தில் தொழிலாளர் நலச் சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதால் நிலக்கரி எடுக்கும் ஒப்பந்தம் ரத்து என்று வாய்மொழியாக செல்லாமல் அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.