மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம் -வைகோ பேச்சு


மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம் -வைகோ பேச்சு
x

மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம் என்று ம.தி.மு.க. மதுரை மாநாட்டில் வைகோ பேசினார்.

மதுரை,

மதுரை வலையங்குளத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நேற்று நடந்தது. வரவேற்புக்குழு தலைவர் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். மாநாட்டினை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு கட்சி கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர், திராவிட இயக்க சுடர் ஏற்றப்பட்டு, அண்ணா, பெரியார் போன்றவர்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இதுபோல் இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூகநீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுய ஆட்சி, அண்ணா ஏற்றிய அறிவுசுடர், நாடாளுமன்றத்தில் வைகோ உள்ளிட்ட தலைப்புகளில் மாநில நிர்வாகிகள் பேசினர்.

ஒரே தேர்தல்

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு; ஒரே தேர்தல் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எறிந்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும், பா.ஜனதாவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வைகோ பேச்சு

மாநாட்டில் நிறைவுரையாக பொது செயலாளர் வைகோ, தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முல்லைப்பெரியாறு, நியூட்ரினோ, மேகதாது அணைக்கு எதிராக என தமிழக மக்கள் நலனுக்காக இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடைப் பயணம் சென்றுள்ளேன். இதுபோல் மக்களுக்காக பலமுறை நடை பயணம் மேற்கொண்டு இருக்கிறேன்.

இதுபோல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக 5 முறை உண்ணாவிரதம், 3 முறை மறியல் போராட்டங்களை நடத்தினேன்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் என் மகன் அந்த நிறுவனத்திடம் பணம் வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். கருணாநிதி நினைத்ததை நான் பேசுவேன் என என்னிடம் பலமுறை என்னிடம் அவரே கூறியுள்ளார். இரண்டு முறை அவருக்கு ஆபத்து வந்தபோது நான் காப்பாற்றினேன். அதையும் மறக்க முடியாது அந்த வகையில் தற்போது நான் பேச நினைத்ததை என் மகன் பேசிவிட்டார். பதவிக்காக நான் இல்லை என என் மகன் பேசியுள்ளார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு திணிக்க நினைத்தால் ம.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

துரை வைகோ

முதன்மை கழகச் செயலாளர் துரை வைகோ பேசியதாவது:-

சனாதனம் என்பது நீ உயர்ந்தவர் நான் தாழ்ந்தவர் என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. சனாதன கலாசாரம் குலக்கல்வியை வலியுறுத்துகிறது. உயர்ந்தவருக்கு ஒரு வேலை தாழ்ந்தவர்க்கு ஒரு வேலை என்ற மனப்பான்மையை வழங்குகிறது.

சனாதனத்தை அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றவர்கள் எதிர்த்தனர். திராவிட இயக்கங்களும் எதிர்த்தது. நாங்கள் இந்து மதத்தையும், இந்து மதத்தை பின்பற்றுவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. திராவிட இயக்கங்களால் சனாதனத்தை அழிக்க முடியும். 50 வருடங்களுக்கு முன்பே சனாதனம் எனும் கொடிய விலங்கின் முதுகெலும்பை அண்ணா, பெரியார் போன்றவர்கள் ஒடித்தனர். எனவே சனாதனத்தை வேரறுக்க வேண்டியது. ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். கட்சியின் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கிடையாது. எந்த பதவிகள் வழங்கினாலும் ம.தி.மு.க தொண்டர் என்று கூறுவது தான் எனக்கு பெருமை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story