சுற்றுலா தலங்களில் முககவசம் அணிவது அவசியம்
கொரோனா அச்சம் எதிரொலியால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் முககவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஊட்டி,
கொரோனா அச்சம் எதிரொலியால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் முககவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துக்கல்லூரி கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி, பொதுப்பணித்தறை பொறியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. இதனால் கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலெக்டர், பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முககவசம் அணிய வேண்டும்
மேலும் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்கவும், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கவும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) அய்யாசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.