சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தறித்தொழிலாளி தீக்குளிக்க முயற்சி


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தறித்தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
x

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தறித்தொழிலாளி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

தீக்குளிக்க முயற்சி

இடங்கணசாலை மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் அழகுராஜ் (வயது 35). தறித்தொழிலாளி. இவர், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் அழகுராஜை தடுத்து நிறுத்தினர். அவர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை போலீசார் சமாதானப்படுத்தி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தறிதொழிலாளி அழகுராஜ் கூறியதாவது:-

ரூ.7 லட்சம் கடன்

எனது தந்தை குடும்ப செலவிற்காக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வீட்டு பத்திரம் வைத்து கடந்த 2002-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் ரூ.1 லட்சம் கடன் கட்டிய நிலையில் 2008-ம் ஆண்டு திடீரென அவர் இறந்துவிட்டார். அதன்பிறகு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கடனை செலுத்த வேண்டி பலமுறை நோட்டீஸ் அனுப்பினர்.

தற்போது வரை தந்தை வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் சேர்த்து ரூ.7 லட்சம் கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் வீட்டை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியின்றி தற்கொலை செய்ய முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தறிதொழிலாளி மீது வழக்கு

இதனிடையே, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்யும் நோக்கில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தறிதொழிலாளி அழகுராஜ் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story