நெய்தல் புத்தக திருவிழா தொடக்கம் : கடலூர் சில்வர் பீச் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் ; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்


தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெய்தல் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இதில் கடலூர் சில்வர் பீச் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடலூர்

"கடலூர் 30"

தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டமாக பிரிந்து இன்றுடன் (சனிக்கிழமை) 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை கொண்டாடும் வகையில் "கடலூர் 30" என்ற தலைப்பில் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் முன்னிலை வகித்தார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புத்தக கண்காட்சியையும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர்.

புத்தகங்களே வளர்ச்சிக்கு உதவும்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், அரசு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்கள் 139 பேருக்கும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 41 அரசு பள்ளிகளுக்கும் பரிசு வழங்கினார். மேலும் அந்த மாணவர்களுக்கு சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.500 சேமிப்பு தொகையுடன் கூடிய வங்கி சேமிப்பு பாஸ் புத்தகமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், திருக்குறளை படித்தாலே இன்றைய உலக நடைமுறைகளை அறிந்து கொள்ளலாம். புத்தகங்கள் மட்டுமே மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும். அதனால் நாளைய இளைஞர்களே புத்தகம் படியுங்கள், நன்றாக வாசியுங்கள், அதன் மூலம் உலகத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்

இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், புத்தகம் படிப்பது அறிவு சார்ந்த விஷயமாகும். புத்தகம் படிப்பதால் மனஅழுத்தம் குறையும். மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடலூர் சில்வர் பீச்சை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மாநகராட்சியையும் அழகுப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் கடலூரை வளர்ச்சியடைந்த மாநகராட்சியாக மாற்றி காட்டுவோம் என்றார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், அய்யப்பன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு நன்றி கூறினார். முன்னதாக நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது 3 மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

கருத்தரங்கம்

அதனை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ராஜ்மோகனின் கருத்தரங்கம் நடந்தது. பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து மாலை 6 மணிக்கு வாழ்க்கைக்கு பெரிதும் பலம் சேர்ப்பது - பண வளமா, மன வளமா என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவின் பட்டிமன்றம் நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கடலில் குளிக்க சென்றவர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

நெய்தல் புத்தக திருவிழாவை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கடலில் குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களை கடலில் குளிக்க விடாமல் தடுத்து, புத்தக திருவிழா முடியும் வரை கடலில் குளிக்க யாருக்கும் அனுமதி கிடையாது என திருப்பி அனுப்பினர்.

நெய்தல் புத்தக திருவிழாவையொட்டி 45 புத்தக அரங்குகளும், செய்தி மக்கள் தொடர்பு துறை, வட்டார போக்குவரத்து துறை, காவல்துறை, கடலூர் மாநகராட்சி, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 110 அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் தினத்தந்தி சார்பில் அமைக்கப்பட்ட புத்தக அரங்கை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர், சி.வெ.கணேசன், கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு புத்தகங்களையும் எடுத்து பார்வையிட்டார். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், அய்யப்பன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அரசு அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story