கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் கோடை விழா அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் தொடங்கி வைத்தனர்
கடலூர் சில்வர்பீச்சில் நெய்தல் கோடை விழா மற்றும் அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் கோடை விழா மற்றும் அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா நேற்று சில்வர் பீச்சில் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக மாலை 4 மணி அளவில் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் நடனம், வில்லுப்பாட்டு, குழு நடனம், கிராமிய கலைநிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இரவு 8 மணி அளவில் தொடக்க விழா நடந்தது. விழாவில் கூடுதல் கலெக்டர் மதுபாலன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
விழாவை தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடுவராக பங்கேற்ற இன்றைய வாழ்வில் பெரிதும் உதவுவது நட்பா, உறவா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தையும் அவர்கள் கேட்டு ரசித்தனர். இறுதியாக இன்றைய வாழ்வில் பெரிதும் உதவுவது உறவே என்று பட்டிமன்ற நடுவர் ராஜா தீர்ப்பு அளித்தார்.
கண்காட்சி
முன்னதாக அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்து, துறை வாரியாக அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டனர். விழாவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் விஜய் ஆனந்த், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மண்டல தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, நடராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கிரேசி, ஆராமுது, விஜயலட்சுமி, சங்கீதா, கவிதா, சசிகலா, புஷ்பலதா, செந்தில்குமாரி, பார்வதி, சுபாஷினி உள்ளிட்ட கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துச்சாமி நன்றி கூறினார்.