7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தலைமறைவான 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தலைமறைவான 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வாஞ்சி என்கிற சதீஷ் (வயது 40). பைனான்சியர். மேலும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைத்தலைவராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் சதீசின் மனைவி ராதா, மாமியார் லட்சுமி, மகள் கவிஸ்ரீ உள்ளிட்டோர் இருந்தனர். சதீஷ் வெளியே சென்றிருந்தார்.

இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் 7 பேர் தாங்கள் கையில் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீட்டின் மீது வீசினார்கள். இதில் பெட்ரோல் குண்டு வீட்டின் வாசலில் விழுந்து வெடித்து சிதறியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறினார்கள். இதனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சதீஷ் மனைவி கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார்.

7 பேருக்கு வலைவீச்சு

அதன் பேரில் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பெட்ரோல் குண்டுகளை வீசியது குந்தாரப்பள்ளியை அகிலன், லட்சுமணராவ் தெரு மஞ்சுநாத், நித்திஷ், மோனிஷ், ஆகாஷ் மற்றும் சிலர் என்பது தெரிந்தது. முன்விரோதத்தில் இவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதும், இருதரப்பினர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவான 7 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story