நாட்டுப்புற கலைஞர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க இணையதளம் - நடிகர் வாகை சந்திரசேகர்


நாட்டுப்புற கலைஞர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க இணையதளம் - நடிகர் வாகை சந்திரசேகர்
x

நாட்டுப்புற கலைஞர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க விரைவில் இணையதளம் தொடங்கப்படும் என்று நடிகர் வாகை சந்திரசேகர் கூறினார்.

திருநெல்வேலி

தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைகள் நலவாரியம் சார்பில் கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைகள் நலவாரிய தலைவர் நடிகர் வாகைசந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெல்லை மண்டலத்தில் உள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களை சேர்ந்த கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். மறைந்த கலைஞர்களின் குடும்ப பராமரிப்புச் செலவுகளுக்காக ரூ.25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார். மேலும் வாரியத்தில் உள்ள கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்க ரூ.25 ஆயிரம் என 127 பேருக்கு ரூ.14½ லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து வாகை சந்திரசேகர் கூறுகையில், தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நெல்லை மண்டலத்தில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மண்டலங்களைச் சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகள் சார்ந்த 7 லட்சம் கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. இதனை எளிமையாக்கும் வகையில் விரைவில் இணையதளம் தொடங்கி, அதன்மூலம் நாட்டுப்புற கலைகள் மற்றும் இயல், இசை, நாடக கலைஞர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைக்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் 2 லட்சம் கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story