பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவிக்கு பத்திரிகை அடித்து திருமணம்
மத்தூரில் விஷ்ணு கோவிலில் பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவிக்கு பத்திரிகை அடித்து திருமணம் நடந்தது.
மத்தூர்:
மத்தூரில் கோட்டை தெருவில் விஷ்ணு கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருமண பத்திரிகை போன்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு மணமகன் இடத்தில் பெருமாள் சாமியும், மணமகள் இடத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சாமிகளின் பெயர்களும் இடம் பெற்று இருந்தது. இந்த அழைப்பிதழ் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சாமிகளின் கழுத்தில் கெட்டி மேளம் முழங்க பக்தர்கள் அட்சதை தூவ தாலி கட்டப்பட்டது. மேலும் மொய் விருந்திற்கு பதிலாக அபிஷேக விருந்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமிகளுக்கு மொய்களும் எழுதினர். முன்னதாக மணமகள் மற்றும் மணமகன் சார்பில் பக்த கோடிகள் பல்வேறு பொருட்களை சீர்வரிசையுடன் எடுத்து வந்தனர். கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் திருக்கல்யாணம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.