திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழாவில் புதன்கிழமை சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா


தினத்தந்தி 24 Aug 2022 2:55 PM IST (Updated: 24 Aug 2022 3:12 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழாவில் புதன்கிழமை சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 8-ம் நாளான புதன்கிழமை சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்தார். வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடக்கிறது.

ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆவணித் திருவிழா 8-ம் நாளான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. 6 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

பச்சை சாத்தி

பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, மகா தீபாராதனை நடந்தது. பகல் 11.10 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை நிற கடைசல் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பெருமாள் அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை தேரோட்டம்

ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story