களைகட்டிய மீன்பிடி திருவிழா
சிறுகுடி அருகே மீன்பிடி திருவிழா களை கட்டியது.
நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபட்டியில் கேசரி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்ததால் கேசரி கண்மாய் நிரம்பியது. தற்போது கண்மாயில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. இதையொட்டி மீன்பிடி திருவிழா நடத்த விழாக்கமிட்டியினர் முடிவு செய்தனர். மேலும் இதுகுறித்து நத்தம், சிறுகுடி, பூசாரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், சிங்கம்புணரி, பொன்னமராவதி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் கண்மாய் பகுதியில் குவிந்தனர். சிறிது நேரத்தில் மீன்பிடி திருவிழா தொடங்கி களைகட்டியது. அப்போது சாரை, சாரையாக கண்மாயில் இறங்கிய பொதுமக்கள், ஊத்தா, வலை, சேலையை வைத்து போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். இதில், விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் சிக்கின. பின்னர் பொதுமக்கள் பிடிபட்ட மீன்களை தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர். இதனால் கிராமங்களில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.