புதர்மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும்
புதர்மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும்
திருத்துறைப்பூண்டி வளவனார் வாய்க்காலில் புதர்மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளவனார் வடிகால்
டெல்டா மாவட்டங்களில் திருத்துறைப்பூண்டி பகுதி மிகவும் பின்தங்கி உள்ளது. இந்த பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை, தாளடி, சம்பா என முப்போக சாகுபடி செய்த விவசாயிகள் பருவநிலை மாற்றத்தாலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காததாலும் ஒருபோக சாகுபடியே செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்றாலும் கடும் மழையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருத்துறைப்பூண்டியில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனங்கள் பெறும் வகையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு வரை வளவனார் வடிகால் வாய்க்கால் உள்ளது.
புதர்மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகள்
மழைக்காலங்களில் தங்கள் வயல்களில் கூடுதலாக தேங்கும் நீரை வடிய வைக்க இந்த ஆறு பயன்படும். மேலும் வெள்ளம் ஏற்படும் போது இந்த ஆறு வழியாக தான் தண்ணீர் கடலில் கலக்கும். தற்போது வளவனார் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகள் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வளவனார் வாய்க்காலில் புதர்மண்டி கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரைகளை பலப்படுத்த வேண்டும்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி சின்னையன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள வளவனார் வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். வரும் காலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும். இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து சமூக அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இந்த பகுதி விவசாயிகளுக்கு வளவனார் வாய்க்கால் மிகுந்த உதவியாக இருக்கும். கடுமையான மழைக்காலங்களிலும் இந்த வாய்க்காலில் தான் தண்ணீர் வடிய வேண்டும். ஆனால் வளவனார் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் மண்டி தண்ணீர் வடிய முடியாமல் தேங்குவதால் சாகுபடி செய்த விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் வளவனார் வாய்க்காலில உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றார்.