வாரந்தோறும் சனிக்கிழமை மனுநீதி நாள் முகாம்


வாரந்தோறும் சனிக்கிழமை மனுநீதி நாள் முகாம்
x

வாரந்தோறும் சனிக்கிழமை மனுநீதி நாள் முகாம்

நாகப்பட்டினம்

பொதுமக்கள் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் நாகை மாவட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மனுநீதி நாள் முகாம் நடக்கும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்க் தெரிவித்துள்ளார்.

மனுநீதி நாள் முகாம்

நாகை மாவட்ட போலீஸ் துறை சார்பில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்க் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் நாகை உட்கோட்டத்துக்குட்பட்ட டவுன், வெளிப்பாளையம், நாகூர், திட்டச்சேரி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி உள்பட 10 போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வாரந்தோறும் சனிக்கிழமை

முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்க் பேசுகையில்,

பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் கொடுக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாரந்தோறும் புதன்கிழமையன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.

அதேபோல மற்றொரு முயற்சியாக நாகை, வேதாரண்யம் உட்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மனுநீதி நாள் முகாம் நடைபெறும்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடக்கும் இந்த மனு நீதி நாள் முகாமில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனு அளிக்கலாம்.

தகவல் தெரிவிக்கலாம்

போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். முகாமில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்டவர்கள் குறித்து துணிச்சலாக தகவல் தெரிவிக்கலாம்.

அதேபோல உங்கள் எஸ்.பி.யிடம் பேசுங்கள் சேவை மூலம், கஞ்சா, சாராயம், லாட்டரி, ரவுடிசம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த தகவலை 24 மணி நேரமும் 8428103090 என்ற எனது செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.


Related Tags :
Next Story