நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்புக்கட்டண ரெயில்
நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்புக்கட்டண ரெயில் இயக்கப்படுகிறது
வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு ஒரு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண்.06037) நாகர்கோவிலில் இருந்து வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை சனிக்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (வ.எண்.06038) வேளாங்கண்ணியில் இருந்து வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 1-ந் தேி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில், 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.