மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல்


மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல்
x

மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் சுமார் 6 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. அதிலும் ஸ்ரீராமபுரம், நீலமலைக்கோட்டை, கசவனம்பட்டி, சிந்தலக்குண்டு, சிரங்காடு ஆகிய கிராமங்களில் அதிக அளவு மக்காச்சோளம் பயிரிடப்பட்டு இருக்கிறது. இவை 15 நாட்கள் முதல் 30 நாட்கள் பயிராக வளர்ந்து உள்ளன.

இதற்கிடையே அந்தபகுதிகளில் மக்காச்சோள பயிர்களில் படைப்புழுவின் தாக்கம் தென்படுகிறது. இதையடுத்து வேளாண்மை இணை இயக்குனர் விஜயராணி தலைமையில் உதவி இயக்குனர் சந்திரமோகன் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.

அதன்படி மக்காச்சோள வயல்களில் வரப்பு பயிராக சூரியகாந்தி, பயறு வகைகளை பயிரிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 6 இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். மேலும் சான்றோலின் ப்ரொபைல் மருந்தை ஒரு கிலோவுக்கு 4 மில்லி எனும் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். 5 சதவீதம் வேப்ப விதை கரைசலை வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும் என்றும், நோய் பரவலை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பு குறித்தும் விளக்கினர்.


Next Story