பா.ஜனதாவினருக்கு வரவேற்பு


பா.ஜனதாவினருக்கு வரவேற்பு
x

ஜாமீனில் வந்த பா.ஜனதாவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

நெல்லை மாநகர பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்து ஏலம் விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை மண்டலத்தில் பிடித்த மாடுகளை குடிநீர் தொட்டி பகுதியில் கட்டி வைத்திருந்தனர். அங்கு ஒரு மாடு கன்று போட்டது. இதனால் அங்கு சென்ற பா.ஜனதா கட்சியினர் அந்த மாடுகளை அவிழ்த்து விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவட்ட தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ், மண்டல செயலாளர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை பாளையங்கோட்டை சிறையில் இருந்து தயாசங்கர், சுரேஷ், சங்கர சுப்பிரமணியம் ஆகிய 3 பேரும் வெளியே வந்தனர். அவர்களுக்கு சிறை வாசலில் வைத்து கட்சியினர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். பசுமாட்டை அலங்காரம் செய்து கோ பூஜைக்கு தயார்படுத்துவது போல் தயார்படுத்தி கழுத்தில் மாலை அணிவித்து சிறை வாசலுக்கு அழைத்து வந்திருந்தனர். பின்னர் அவர்களை பட்டாசு வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். திறந்த ஜீப்பில் ஊர்வலமாக கட்சி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது ஒயிலாட்டம், கரகாட்டம் நடந்தது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story