பா.ஜனதா மாவட்ட தலைவருக்கு ஆரல்வாய்மொழியில் வரவேற்பு
ஜாமீனில் வெளியே வந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ்க்கு ஆரல்வாய்மொழியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலமாக செல்ல போலீஸ் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழி,
ஜாமீனில் வெளியே வந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ்க்கு ஆரல்வாய்மொழியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலமாக செல்ல போலீஸ் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழியில் வரவேற்பு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் கடந்த 3-ந்தேதி இளைஞர் காங்கிரசார் பா.ஜனதா அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு பா.ஜனதா கட்சியினர் வந்தனர். இதனால் அவர்கள் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி பெரிய மோதலானது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர் தர்மராஜ், துணை தலைவர் ெ்சாக்கலிங்கம், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 3 பேரும் நேற்று காலையில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் நாகர்கோவில் வந்தனர். அவர்களுக்கு ஆரல்வாய்மொழி சந்திப்பில் ஆரல் பா.ஜ.க தலைவர் நரேந்திரகுமார் தலைமையில் பா.ஜனதாவினர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பட்டாசும் வெடிக்கப்பட்டது.
இதில் தோவாளை கிழக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி தலைவர் சந்திரகுமார், மாவட்ட பிரசார பிரிவு துணைத்தலைவர் இசக்கிமுத்து, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் மகாதேவன், மாதேவன்பிள்ளை, பொருளாளர் குகன், சகாயநகர் தலைவர் முருகன், ஆரல் பார்வையாளர் சிவனணைந்த பெருமாள், நலதிட்ட பிரிவு ஒன்றிய தலைவர் சிங்காரவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் தர்மராஜ் காரைவிட்டு இறங்கி பா.ஜ.க.வினருடன் நடந்து சென்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஊர்வலமாக செல்ல அனுமதி மறுத்தனர். அப்போது போலீசாருடன் தர்மராஜ் மற்றும் பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தர்மராஜ் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். முன்னதாக மாவட்ட தலைவர் காருக்கு பின்னால் 38 கார்கள் வந்தன. அவை 5 கார்கள் வீதம் செல்ல அனுமதிக்கப்பட்டன.
வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி நாகர்கோவிலில் இருந்து வந்த வாகனங்கள் தோவாளையில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக நெல்லைக்கு திருப்பி விடப்பட்டன.