விளாத்திகுளத்தில் செஸ்ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு
விளாத்திகுளத்தில் செஸ்ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
எட்டயபுரம்:
செஸ்ஒலிம்பியாட் ஜோதி நேற்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு வந்தது. அங்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் ஜோதிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து பள்ளி மாணவர்களின் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் நடைபெற்றது. இதை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சிறிது தூரம் பள்ளி மாணவர்களுடன் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ், தாசில்தார் சசிகுமார், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தொடர்ஜோதி எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்திற்கு வந்தது. அங்கு எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து விஜயன், பள்ளி ஆசிரியர்கள் செல்வ மாரியப்பன், பழனி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இதேபோன்று எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 3, 15-வது வார்டுகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் தலா ரூ.11 லட்சம் வீதம் ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ. தலைமை வகித்து, அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணை தலைவர் கதிர்வேல், செயல் அலுவலர் கணேசன், கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் நகரசெயலாளர் பாரதிகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, எட்டயபுரம் பேரூராட்சியில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் சீமை கருவேல மரங்களை அகற்றி, பயனுள்ள மரங்களை வளர்ப்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.