தூத்துக்குடி வந்த தேசியகொடிக்கு வரவேற்பு
தூத்துக்குடி வந்த தேசியகொடிக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சுதந்திரதின அமுத பெருவிழா மற்றும் மாநில மாநாட்டை முன்னிட்டு குடியாத்தம் முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய கொடி பயணம் கடந்த 8-ந் தேதி குடியாத்தத்தில் தொடங்கியது. தொடர்ந்து விடுதலைக்காக பாடுபட்ட பல்வேறு தியாகிகள் வாழ்ந்த ஊர்களின் வழியாக செல்கிறது. இந்த தேசியக்கொடி பயணத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் கொடியை தயாரித்த குடியாத்தத்தை சேர்ந்த குடும்பத்தினர் தயாரித்த தேசிய கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
அதன்படி நேற்று தேசிய கொடி பயணம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வ.உ.சி. உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரான், மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் சிவனாகரன், மாநகர் செயலாளர் முத்துசிப்பி தாமோதரன், மாநகர் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் விக்னேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கொடி பயணம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றது. இந்த பயணம் இன்று (வெள்ளிக்கிழமை) மார்த்தாண்டத்தில் முடிவடைகிறது.