தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு
தென்காசி அருகே தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரவேற்கப்பட்டது.
தென்காசி:
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 5, 6, 7 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெற்றது. இதில் சிலம்ப போட்டியில் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை தமிழன் போர்முறை சிலம்பம் பயிற்சி கலைக்கூடம் சார்பில் 11 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ராதாகிருஷ்ணன், பாலாஜி, மஜித்ரா, பிரவீன், ஜனனி, ரம்யா தேவி ஆகியோர் தங்கப்பதக்கமும், ஸ்ரீதருண், சத்யா, ரோஷன், பிரதீஷ் பால்ராஜ் ஆகியோர் வெள்ளி பதக்கமும், தனுஸ்ஸ்ரீ வெண்கல பதக்கமும் வென்றனர். இவர்கள் வருகிற ஜனவரி மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
இந்த மாணவ-மாணவிகள் நேற்று மாலை சொந்த ஊரான மத்தளம்பாறைக்கு வந்தபோது, கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவி மைதிலி தலைமையில் கிராம மக்கள் மாலை, சால்வைகள் அணிவித்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளித்தனர். இவர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்தால் மேலும் பல சாதனைகள் புரிவார்கள் என்று சிலம்ப பயிற்சியாளர் அசாந்த் குமார் தெரிவித்தார்.