திருவாவடுதுறை திரும்பிய ஆதீனத்திற்கு வரவேற்பு


திருவாவடுதுறை திரும்பிய ஆதீனத்திற்கு வரவேற்பு
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி நாடாளுமன்ற திறப்பு விழாவில் பிரதமரிடம் செங்கோல் வழங்கி திருவாவடுதுறை திரும்பிய ஆதீனத்திற்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

டெல்லி நாடாளுமன்ற திறப்பு விழாவில் பிரதமரிடம் செங்கோல் வழங்கி திருவாவடுதுறை திரும்பிய ஆதீனத்திற்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செங்கோல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தொன்மை வாய்ந்த திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 24 வது குருமகா சன்னிதானமாக அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி புரிந்து வருகிறார். இந்த நிலையில் 1947-ம் ஆண்டு சுதந்திரத்தை அடையாளப்படுத்தும் விதமாக கோளறு பதிகம் பாடி ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலை, கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது, தமிழகத்தின் அனைத்து ஆதீனகர்த்தர்களின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினார்.

இதையடுத்து நேற்றுமுன்தினம் ஆதீன திருமடத்துக்கு திரும்பிய திருவாவடுதுறை ஆதீனகர்த்தரை நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அமர்த்தி, சிவ வாத்தியங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க மலர் தூவி வாண வேடிக்கையுடன் கிராமமக்கள் ஆதீன நுழைவு வாயிலில் இருந்து ஆதீன திருமடத்திற்கு அழைத்துச் சென்றனர். வழியெங்கும் பொது மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு, திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரலாற்று நிகழ்வு

அப்போது ஆதீனம் கூறுகையில் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது திருவாவடுதுறை 20-ம் சன்னிதானம் சார்பில் பிரதமர் நேருவிடம் அப்போது தங்க செங்கோல் வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் அதனை தொடர்ந்து சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு புதிதாக திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் அந்த செங்கோல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

இது திருவாவடுதுறை மட்டுமல்லாது தமிழ்நாடு இந்தியா ஏன் உலகிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு எனவும் இந்த வரலாற்று நிகழ்வை அனைவரும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அனைவரும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ ஆசிர்வதிப்பதாகவும் அப்போது அவர் கூறினார். மேலும் நரசிங்கம்பேட்டை, ஆடுதுறை, திருவாவடுதுறை உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story